Published : 30 Oct 2023 11:58 AM
Last Updated : 30 Oct 2023 11:58 AM
மதுரை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்ல சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்க்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை விமானத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய கூட்டணி இந்தியா கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அதை இந்தியா கூட்டணி என்று சொல்லக்கூடாது அது ’இண்டி’ கூட்டணி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அக்கூட்டணியில் எந்த தலைவரும் இல்லை., இந்தியாவை ஆள பிரதமர் நரேந்திர மோடி போன்று எந்தத் தலைவரும் இல்லை. இம்முறை 300 அல்ல 400 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைப்போம்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா காணாத வளர்ச்சியை இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றி இருக்கிறார். மனிதவள மேம்பாடு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம்.
கேள்வி: 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தனிப்பட்ட முறையில் நான் 4 மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளேன்., ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
கேள்வி: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா அதற்கான முன்னோட்டமா?
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
கேள்வி: 3வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாரா?
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் செய்த சாதனையை வைத்து 100% மீண்டும் பிரதமராக வருவார். தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். இந்த வளர்ச்சிகளின் மூலம் மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT