Published : 30 Oct 2023 04:10 AM
Last Updated : 30 Oct 2023 04:10 AM
சென்னை: ஐசிஎப் அம்பேத்கர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பாலம் அமைத்த போதும் நெரிசல் குறைந்த பாடில்லை என அப்பகுதி வழியே பயணிக்கும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை, கொளத்தூர், ரெட்டேரி செங்குன்றம் பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம் போன்ற பகுதிகளுக்கு கல்வி, பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். இவர்கள் ஐசிஎப் வழியாக பயணிக்கும் போது ரயில் சேவை காரணமாக அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக 15 நிமிடத்துக்கு ஒரு முறை கேட் அடைக்கும் வகையில் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதோடு, கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தொடர்ச்சியாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், உடனடியாக சென்னை மாநகராட்சியின் அனுமதி கிடைக்கவில்லை. மேலும் அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாலம் அமைக்க ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பாலம் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. இது போன்ற பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு எல்.சி.1 ரயில்வே மேம்பாலத்துக்கான சென்னை மாநகராட்சியின் ஒப்புகை அளிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
அதற்கு பிறகு ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து தலா 50 சதவீதம் செலவை பகிர்ந்துகொண்டு மேம்பாலப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு அக்.31-ம் தேதி பாலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் பாலத்தின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்திருந்தார்.
பணிகள் முடிவடைந்து ரூ.61 கோடியே 98 லட்சம் திட்ட மதிப்பிலான பாலத்தை கடந்த மே 13-ம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாலத்துக்கு முன்னாள் மேயர் மறைந்த சிட்டிபாபு பெயரும் சூட்டப்பட்டது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலையும் நேர விரயத்தையும் தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு பாலம் கிடைத்தது.
இது கொளத்தூர், வில்லிவாக்கம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என நம்பப்பட்டது. அப்போது தான் வில்லிவாக்கம் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக அண்ணாநகர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பலரும் மேயர் சிட்டி பாபு பாலம் வழியாக செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரம், பாலத்தில் இருந்து இறங்கி புதியஆவடி சாலையை அணுகுவதற்கு முக்கிய வழியாக இருக்கும் அம்பேத்கர் சாலையில் ஐசிஎப் தொழிற்சாலைக்கான உதிரி பாகங்கள், இயந்திரங்களை எடுத்து வரும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்த முடிவதால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கொளத்தூரை சேர்ந்த சதீஷ் கூறியது: பணி நிமித்தமாக நாள் தோறும் கீழ்ப்பாக்கம் சென்று வருகிறேன். இப்பகுதியில் காலை, மாலை என 2 வேளைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நெரிசலுக்கு தீர்வாக தான் மேம்பாலத்தை எதிர்பார்த்தோம். ஆனால் மேம்பாலம் கிடைத்தும் நெரிசலுக்கான வேறு சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இதனால் நெரிசலும், காத்திருக்கும் நேரமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பொதுமக்கள் நலன் கருதியே மெட்ரோ ரயில் நிறுவனமும், ஐசிஎப் தொழிற்சாலைகளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மெட்ரோ ரயில் நிலைய பணிகளை சற்று விரைவு படுத்தினால் பெரும்பாலானோர் வில்லிவாக்கம் சுரங்கப் பாதையையே பயன்படுத்துவர்.
அம்பேத்கர் சாலையை எடுத்துக் கொண்டால் லாரிகள் அணிவகுத்து நிற்பதால் நீண்ட நேர தாமதமாகிறது. ஐசிஎப் தொழிற்சாலைக்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அங்கு லாரிகளை மாற்றி நிறுத்தினால் சாலைகளை முற்றிலுமாக பயன்படுத்த முடியும். நெரிசலும் இருக்காது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு தக்க அறிவுறுத்தலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐசிஎப் நிர்வாக உயரதிகாரிகள் கூறும்போது, "அம்பேத்கர் சாலைமுற்றிலும் ஐசிஎப் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இதில் பொதுமக்கள் நலன் கருதியே அவர்களது பயன்பாட்டுக்காக வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். குறிப்பாக மக்களுக்கு பெருமளவு இடையூறு ஏற்படாத அளவுக்கு லாரிகளை நிறுத்தவே அறிவுறுத்தியுள்ளோம்.
அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் அனைத்தும் மிகப் பெரியவை. சாதாரணமாக எடுத்து திருப்பி விடமுடியாது. மேலும் அங்கு நிறுத்தியிருப்பதாலேயே உடனுக்குடன் தொழிற்சாலை, கிடங்கு போன்றவற்றுக்கு செல்ல முடிகிறது. எனவே, அங்கிருந்து லாரிகளை மாற்றுவது தொடர்பாக திட்டமில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT