Published : 16 Jan 2018 08:38 AM
Last Updated : 16 Jan 2018 08:38 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்: முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தனர்

 உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் கே. பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்தனர். 

முதன்முறையாக ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சியும் அலங்காநல்லூரில் நடைபெற்றது.

இந்த போட்டியை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.

தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அடையாளப்படுத்தும் ஜல்லிக்கட்டு திருவிழா தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாட்களில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விதித்த தடையால் கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவில்லை.இதனால் 2017-ம் ஆண்டு தடையை மீறி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அதன் ஆர்வலர்களால் நடைபெற்றன. திட்டமிட்டப்படி அவனியாபுரம், பாலமேட்டில் வாடிவாசலில் காளைகளை சிலர் அவிழ்த்துவிட்டனர். அதேபோல, அலங்காநல்லூரில் வாடிவாசலில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்தால் நீங்கிய தடை

இதனால் அதிருப்தி அடைந்த அலங்காநல்லூர் ஊர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ‘வாடிவாசலை திறக்கும் வரை, வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்துக்குப் பணிந்து தனிச் சட்டம் நிறைவேற்றியதால் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கியது.

இந்த சட்டப் போராட்டத்தால் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தபிறகே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு வழக்கம்போல் பொங்கல் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவர்.

நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று ஜனவரி 16-ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க 1,241 மாடுபிடி வீரர்களுக்கும் 1000 காளைகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போட்டியை தொடங்கிவைக்க முதல்வர் கே.பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வருகின்றனர். முதல்வர் வருவதால் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்ட போலீஸார் மதுரையில் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,500 போலீஸார், மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம் வழியாக அலங்காநல்லூர் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் முதல் அலங்காநல்லூர் எல்லை வரை சிறப்பு அதிரடிப்படை போலீஸார், ஆயுதப்படை போலீஸார், உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அலங்காநல்லூரில் 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வாகனங்கள் ஊர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும் இடத்துக்கு நடந்து வர மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி, அவர்களுக்கு மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம் வழியாக அலங்காநல்லூர் வரை அதிமுகவினர் வழிநெடுக பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு தனி காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுதவிர விஐபிகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கவும் தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூரில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரள்வர். அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டை பார்க்க, வாடிவாசல் பகுதியில் இரட்டை தடுப்பு வேலியுடன் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக வரிசை முறையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குறைந்தது 5 முதல் 10 காளைகள் அவிழ்த்து விடுவதையும் வீரர்கள் அடக்குவதையும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x