Published : 29 Oct 2023 06:06 PM
Last Updated : 29 Oct 2023 06:06 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு, திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்துக் கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார்.
ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன். இவர் தனது மாத ஊதியத்தில் இருந்து கரோனா நிவாரண நிதி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார். அதேபோல் கடந்த 6 ஆண்டுகளாக தனது மாத ஊதியத்தில் இருந்து ஆதவரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவதற்கு புத்தாடை வழங்கி அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகர் லைட் ஆஃப் லைஃப் குழந்தைகள் காப்பகம், சேத்தூர் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளை பிரபல ஜவுளி கடைக்கு எம்எல்ஏ தங்கபாண்டியன் அழைத்து சென்றார். அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை எம்எல்ஏ வாங்கி கொடுத்தார். எம்எல்ஏ தங்கபாண்டியன் 3 மாத ஊதியத்தில் தொடர்ந்து 7-வது ஆண்டாக 231 குழந்தைகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் புதிய ஆடைகளை வாங்கி கொடுத்தார்.
எம்எல்ஏ தங்கபாண்டியன் கூறுகையில், "தமிழக அரசு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன்", என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT