Published : 29 Oct 2023 03:09 PM
Last Updated : 29 Oct 2023 03:09 PM
கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான இந்து மகா சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை, அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டெடுக்க போராட்டம் நடைபெறவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா தமிழக தலைவர் எம்.ரமேஷ் பாபு கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா தென்னிந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் பி.செந்தில் முருகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் வி.பிரபாகரன் வரவேற்றார். கேரள மாநிலத் தலைவர் ஏ.ராஜேஷ், ஆந்திர மாநிலத் தலைவர் ஜி.மல்லிகா அர்ஜூணா, தெலுங்கான மாநிலத் தலைவர் எஸ். சுதாதர் ரெட்டி, கர்நாடக மாநிலத் தலைவர் எஸ்.ஆனந்த் பாபு, தமிழ் மாநிலத் துணைத் தலைவர் வி.சேகர் ராவ், சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்ட இளைஞரணிப் பொதுச் செயலாளர் ஏ.மகேஷ் நன்றி கூறினார்.
இதில், தமிழக மாநிலத் தலைவர் எம்.ரமேஷ் பாபு, பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியது, "நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியா முழுவதும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றோம். 8-வது ஆண்டாக, அடுத்தாண்டு ஜனவரி 17-ம் தேதி குடை யாத்திரை கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு, தென்னிந்தியா வழியாக ஊர்வலமாகச் சென்று, அயோத்தியிலுள்ள ராமர் கோயிலில், அந்தக் குடையை அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி அங்குச் சமர்ப்பிக்கவுள்ளோம். பாரத நாட்டை இந்து நாடாக அறிவிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளோம். இந்த நாட்டை இந்து நாடாக அறிவிக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்திலிருந்து குடை யாத்திரை புறப்பட்டு, அயோத்திக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.
கும்பகோணத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1200 கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களைச் சேர்ந்த சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களை, அறநிலையத் துறை அதிகாரிகள், அதனுடைய அனைத்து ஆவணங்களையும் மாற்றி, குத்தகைக்கு வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகரத்திற்குள் ரூ.1000 கோடி மதிப்புள்ள இந்து மகா சபாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் தற்போது உள்ளன. இந்த சொத்துக்களை மீட்டெடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கு தொடரப் போகிறோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT