Published : 29 Oct 2023 11:41 AM
Last Updated : 29 Oct 2023 11:41 AM
சென்னை: மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வுக்கு வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிந்திடுமாறு உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி: சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக்டோபர் திங்கள் 30 ஆம் நாள், ஆண்டுதோறும் “உலக சிக்கன நாள்” எனக் கொண்டாடப்படுவதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன்வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும்.
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், பொருள் செலவாகும் வழி பெரிதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். “இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும்.
சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலம் தங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிந்திட வேண்டுகிறேன். சேமிப்போம்! சிறப்பாக வாழ்வோம்! இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT