Published : 28 Oct 2023 10:49 PM
Last Updated : 28 Oct 2023 10:49 PM
சென்னை: "வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்" என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற டிவிஎஸ் குழும விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், "வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்.
இங்கே ஒரு புத்தகம் டி.வி.எஸ் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தொழில் உற்பத்தி மற்றும் பெருக்கத்தின் வழி, வருமானத்தையும் வளர்ச்சியையும் மட்டும் பெருக்காமல், ஒரு படி மேல போய், பல்லுயிரின் இருப்புக்கும் பெருக்கத்துக்குமே தொழில்துறை பயன்பட முடியும் என்று TVS நிறுவனம் காட்டியிருக்கிறது. அதுதான் இந்த புத்தகம்.
தமிழ்நாட்டின் தொழில்நகரமான ஓசூரில் TVS இந்த உதாரணத்தை தொடங்கியிருக்கிறது. அங்கே நிறுவனம் இயங்கத் தொடங்கிய 1976-கால கட்டத்தில் ஒரு குளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பறவைகள் வந்திருக்கிறது. நீர்நிலைகளில் மட்டுமே வசிக்கிற Painted Stork எனப்படும் நாரைகளும் வரத் தொடங்கி இருக்கிறது. தொழிலைப் பெருக்க வந்தவர்கள், பல்லுயிர் பெருக மரங்களை நட்டிருக்கிறார்கள். இருபது ஆண்டுகளில் ஓசூரில் ஒரு காட்டையே TVS உருவாக்கியிருக்கிறார்கள். அதை The Painted Stork என்கிற இந்த புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
'நம்ம ஊர் பள்ளி' என்கிற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலும், இப்போது 158 கோடி ரூபாய் மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, தொழில் துறையில் அதிவேக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. ஏராளமான புதிய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்கிறது.
2024 ஜனவரி மாதம் நாங்கள் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இப்படி எங்கேயும் நடந்ததில்லை என்று புகழப்படுகிற அளவிற்கு நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். டி.வி.எஸ். போன்ற நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். டி.வி.எஸ் போன்ற புதிய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT