Published : 28 Oct 2023 09:39 PM
Last Updated : 28 Oct 2023 09:39 PM
நாமக்கல்: “தேர்தல் லாபத்துக்காக ஆரியம், திராவிடம் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நாமக்கல்லில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “சாதரண மனிதர்கள் உயர் பதவிக்கு செல்வதுதான் ஜனநாயகத்துக்கு அழகு. ஸ்டாலின், கனிமொழி உயர் பதவிக்கு செல்வது அழகல்ல. சத்தியராயன் 3 ரோவர் சோதனை ஓட்டத்துக்கு நாமக்கல் மண் பயன்படுத்தப்பட்டது பெருமைப்பட வேண்டியது விஷயமாகும். சத்திராயன் வெற்றியில் நாமக்கல்லுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்டுக்கு நாமக்கல்லில் 2,700 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய அளவில் முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் முதல் நகரமாக உள்ளது. தமிழக முதல்வர் சொல்கிறார் நான் ஆரியத்துக்கு மட்டும் தான் எதிரி. ஆன்மிகத்துக்கு இல்லை என்கிறார். தமிழகத்தின் அரசவைக் கவிஞராக இருந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய புத்தகத்தில் உண்மையில் தமிழகத்தில் ஆரியமும் இல்லை. திராவிடமும் இல்லை என கூறியுள்ளார். ஆரியமும், திராவிடமும் மாயை என கவிஞர் ராமலிங்கம் சொல்லியுள்ளார். நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தரான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, தீரன் சின்னமலை ஆகியோர் பெயரை வைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மத்திய அரசை வேண்டுமென்றே குறை சொல்கிறார். தமிழகத்துக்கு உச்சபட்ச மரியாதையை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தின் மையப்பகுதியில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 10 லட்சத்து 76 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இதைப்பற்றி பேசுவதில்லை. ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். பல அமைச்சர்கள் இல்லத்தில் ரெய்டு நடக்கிறது.
எம்பி ஜெகத்ரட்சகன் இல்லத்தில் ரெய்டு நடந்தபோது ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை தீர்க்க வேண்டும். ஆனால் ஆரியம், திராவிடம் என முதல்வர் பேசிக் கொண்டுள்ளார். ஒருவேளை விந்திய மலைக்கு மேல்புறம் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஆரியர்கள் என சொல்கிறார்களா. அப்படியெனில் விந்திய மலைக்கு மேல்புறம் இருக்கக்கூடிய ராகுல், நித்திஷ், மம்தா பேனர்ஜி, அரவிந்த் கெஜ்வாலுடன் கூட்டணி எதற்கு.
ஆரியர்கள் வேண்டாம் என்று சொன்னால் இந்திய கூட்டணியில் உள்ள இந்த தலைவர்கள் யார். அவர்கள் எல்லாம் திராவிடர்களா? தமிழகத்துக்கு ஆரியம், திராவிடம் வேண்டாம். அந்த பொய்யெல்லாம் வேண்டாம். தேர்தல் லாபத்துக்காக ஆரியம், திராவிடம் என பேசி இதை வைத்து 2024 தேர்தலை சந்திக்கிப்போறோம் என கிளம்பி உள்ளார்கள். காவிரிக்கு தண்ணீர் வேண்டுமென்றால் கர்நாடகாவுக்கு கடிதம் எழுத வேண்டும். ஆனால், தமிழக முதல்வர் பிரதமர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவார். நீட் வேண்டாம் என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
திமுக நடத்தும் தனியார் கல்லூரிக்கு டொனேஷன் கிடைக்காது என்பதால் திமுகவின் மொத்த குடும்பமும் நீட்க்கு எதிராக போராடிட வருகிறது. முட்டை மந்திரவாதி போல் உதயநிதி ஸ்டாலின் முட்டையை ஏந்திச் செல்கிறார். இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பது கண்கூடாகத் தெரிகிறது” என்றார். பாஜக மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT