Published : 28 Oct 2023 08:28 PM
Last Updated : 28 Oct 2023 08:28 PM
ராணிப்பேட்டை: “சமூக நீதியை பேசும் திமுக அரசு தமிழகத்தில் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் சோளிங்கர், அரக்கோணம் ( தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சோளிங்கரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தை நிர்வாக நலனுக்காக 3 ஆக பிரிக்க அதிக போராட்டங்கள் மற்றும் அழுத்தம் கொடுத்தது பாமக. இந்த மாவட்டம் பிரித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஆனால், மாவட்டத்தில் அரசு சார்பில் அடிப்படை கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இந்த மாவட்டத்துக்கு என்று மருத்துவக் கல்லூரி இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், இந்த மாவட்டத்தில் நீண்ட கால கோரிக்கைகளும் பல இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக சிப்காட் குரோமியம் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்க பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. சோளிங்கரில் அதிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்காக தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.
காவேரிப்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும். சென்னையில் உள்ள மக்களுக்கு காவிரிப்பாக்கம் ஏரி தண்ணீர் பயன்படுகிறது. சென்னை மக்களுக்கு வீராணம் ஏரி தண்ணீர் அளிக்கிறது. அதேபோல, சென்னை மக்களுக்கு நேரடியாக இல்லாமல் மறைமுகமாக காவேரிப்பாக்கம் பயன் அளித்து வருகிறது. இந்த ஏரி நிரம்பினால், சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும். இதனை சென்னையில் உள்ள ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும், சோளிங்கர் நரசிம்மர் சுவாமி கோயிலின் ரோப் கார் பயன்பாடு இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதேபோல், தமிழக திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை பாமக மற்றும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் எதிர்த்து வந்தது. நீட் தேர்வை எதிர்க்கும் திமுக, ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வையும் கொண்டு வரக்கூடாது.
மேலும், காவிரி டெல்டா பகுதியில் தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் போதுமான மழை வரவில்லை. டெல்டா பகுதிகளில் பொதுவாக சம்பா மற்றும் குறுவையில் 15 லட்சம் ஏக்கர் பயிர் செய்வார்கள். அதில் இந்த ஆண்டு குறுவையில் 5 ஐந்து லட்சம் ஏக்கர் பயிர் செய்தனர். இதில், 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீர் இல்லாமல் கருகியது. சம்பா பயிர் செய்ய தற்போது தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் , மேட்டூர் அணையில் 18 டி எம் சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே வரும். டெல்டா விவசாயிகளின் நலன் கருதி இழப்பீடாக முதல் கட்டமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்கள் நலனைக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சமூக நீதியை பேசும் திமுக அரசு தமிழகத்தில் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். நாட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே, மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல், தேவையின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். நாட்டில் 10 லட்சம் மருத்துவர்கள், 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும், மாநிலத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளே இல்லை. அவைகள் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு குறைவான நிதியையே கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்துள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. இத்திட்டம் பெண்களுக்கானது. இதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது. இதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பலமுறை இது குறித்து முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். மதுவால் பல தலைமுறைகளை பாதித்துள்ளது. தற்போது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அருகே கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவுக்கு 20,000 காவலர்களை அரசு நியமித்து கண்காணிக்க வேண்டும். கஞ்சா ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திண்டிவனம் - நகரி ரயில்வே பாதைக்கு அரசு தற்போது 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதுமானதாக இல்லை. இந்த திட்டம் தொடர்பாக தொடர்ந்து நாங்கள் அதை கவனித்து வருகின்றோம்.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. திமுகவும் இதை ஆதரித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த அறிவிப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தரவுகளை திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலில் பாமக கூட்டணி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இதில், முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், ஒருங்கிணைத்த வேலூர் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி, மேற்கு மாவட்டச்செயலாளர் ப.சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன் உட்பட பலரும் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT