Published : 28 Oct 2023 12:27 PM
Last Updated : 28 Oct 2023 12:27 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை அலுவலகம் மீது தாக்குதல்: பின்னணியை கண்டறிய முத்தரசன் வலியுறுத்தல்

இரா.முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலின் பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகம் சென்னை மாநகரில், 43 செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

1973 ஆண்டு விமான விபத்தில் இறந்து போன கட்சி தலைவர் கே.பாலதண்டாயுதம் நினைவாக “பாலன் இல்லம்” என்ற பெயரில் அமைந்த கட்சி அலுவலகம் எட்டு மாடிக் கட்டிடமாக புதுப்பித்து, வலுவான சுற்றுச் சுவர் கொண்ட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தாமஸ் சாலையில் நேற்று (27.10.2023) இரவு 7.45 மணி முதல் 9.30 மணி வரை சமூக விரோத விஷமிகள் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்சி அலுவலக பாதுகாவலர் உள்ளிட்ட பணியாளர்கள் தாக்குதல் நடத்தும் நபர்களைக் கண்டறியும் முயற்சிக்கும் போது, எங்கோ பதுங்கி விடுகின்றனர். அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தால் அவர்கள் எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் இருந்த இடம் நோக்கி கற்களும், பாட்டிலும் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் ஐந்து நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளின் சட்ட விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x