Published : 28 Oct 2023 10:36 AM
Last Updated : 28 Oct 2023 10:36 AM

சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி அருகே மாடு முட்டியதில் படுகாயமடைந்து, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் அவர் மாடு முட்டிய காயத்தால் மட்டுமே உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பொதுமக்களை தாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா கோயில் தெருவில் கடந்த 18 ஆம் காலை நேரத்தில் சுந்தரம் என்ற முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மாடு திடீரென சுந்தரத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் மயக்கமடைந்தார். இதனையடுத்து அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 10 நாட்களாக சுந்தரத்துக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் மாடு முட்டிய காயத்தால் மட்டுமே உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தனவா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சென்னை மாநகராட்சியும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருணன் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "பொது இடங்களில் சுற்றித்திரிந்த 3,853 மாடுகளை பிடித்திருக்கிறோம். இதுவரை மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.75.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஐந்து வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் பொதுமக்களை குறை கூறக்கூடாது. மாட்டின் உரிமையாளர்கள் அபராதத் தொகையை கட்டி விட்டு மீண்டும் மாடுகளை சுற்றித் திரிய விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு, சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x