Published : 28 Oct 2023 11:35 AM
Last Updated : 28 Oct 2023 11:35 AM

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு: 2,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஆய்வு செய்த மேயர் இந்திராணி.

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், அனைத்துத் தரப்பினரும் மரியாதை செலுத்த தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது. முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது ஜெயந்தி விழா வரும் 30-ம் தேதி தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால், முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மேயர் இந்திராணி ஆய்வு மேற்கொண்டார். மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையர்கள் வரலெட்சுமி, ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் மதுரை நகர், புறநகர் பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சோதனைச் சாவடி, முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்தல் மற்றும் அரசியல் தலைவர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடப்பதால் நாளையும், நாளை மறுநாளும் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறியதாவது: தேவர் சிலைக்கு வாகனங்களில் வருவோர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தமுக்கம், மேலகாரத் தெரு, அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையை சுற்றியுள்ள 16 கிராமங்களில் இருந்தும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் அமைதியான முறையில் சிலை பகுதிக்கு வந்து செல்லவேண்டும்.

மோட்டார் சைக்கிள் ரேஸ், அதிவேகமாகச் செல்வோர், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மதுரையில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரில் நடத்திய சோதனைகளில் மது பாட்டில்களை பதுக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3,800 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதனிடையே தேவர் குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய கூடுதல் டிஜிபி அருண் இன்று (அக். 28) மதுரை வருகிறார். அவர் ராமநாதபுரம் மாவட்டம் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x