Published : 28 Oct 2023 08:39 AM
Last Updated : 28 Oct 2023 08:39 AM

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

சென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை தொடங்கி அதன் அறிக்கையை ஆளுநர் மற்றும் தலைமைச்செயலரிடம் அளிக்கவுள்ளனர்.

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் வீட்டின் அருகே அமைக்கப்பட்ட கொடி கம்பம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கானாத்தூர் போலீஸார் அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் கட்சியின் இளைஞர் நலன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த ஜூன் மாதம் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதானார். இதே போல் ஆங்காங்கே முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டார். இந்த 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் காவல் ஆணையரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, எம்.பி. பி.சி.மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் இன்று காலை 9 மணி முதல் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை அவர்களது வீட்டில் சந்திக்கின்றனர். முதலில் கோட்டூர்புரத்தில் உள்ள அமர்பிரசாத் வீட்டுக்கும், அடுத்ததாக திருவான்மியூரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டுக்கும் செல்கின்றனர். பின்னர் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிடுகின்றனர்.

இதேபோல், ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கரன், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகள் என மொத்தமாக 7 இடங்களுக்குச் செல்கின்றனர். இந்த பயண பணிகளை தமிழக பாஜக சார்பில் துணைத் தலைவர் டால்பின் தர், மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் ஒருங்கிணைக்கவுள்ளனர்.

தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ஆய்வுக் குழுவினர், ஆய்வின் முடிவு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் போன்றவற்றை அறிக்கையாக தயாரித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா மற்றும் கட்சியின் தேசிய தலைமையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x