Published : 28 Oct 2023 06:05 AM
Last Updated : 28 Oct 2023 06:05 AM

சூழலியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: சென்னையில் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், மத்திய இணை அமைச்சர் பத் நாயக், தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை: காலநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் ஆராய்ச்சியில் கடல்சார் பிரிவு மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று, சென்னையில் நடந்த இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தினார்.

சென்னை உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி அவர் பேசியதாவது:

தென்னிந்தியாவில் பல்லவர்கள் வலிமையான கடற்படையை கொண்டிருந்தனர். 10, 11-ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் ஒப்பிட முடியாத கடல்சார் திறன் மூலம், நமது வணிகம், பாரம்பரியம் நீண்டதூர நாடுகளுக்கும் பரவியது. கடல் வணிகத்தில் தமிழகம் தலைசிறந்த பகுதியாக விளங்கியது.

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் பிரிவின் பங்களிப்பு மிக அதிகம். வர்த்தகத்தில் 95 சதவீதமும், அதன் மதிப்பில் 65 சதவீதமும் கடல்சார் போக்குவரத்து மூலமாகவே நடைபெறுகிறது. உலக அளவில் மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனாலும், இத்துறையில் பல சவால்களை எதிர்கொள்கிறோம். கடல் ஆழம் தொடர்பான பிரச்சினையால், சரக்கு கப்பல்கள் திசைமாறுகின்றன.

இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உலக அளவில் துறைமுக வளர்ச்சியில் முதல் 20 நாடுகளில் இந்தியா இல்லை. சிறந்த 50 துறைமுகங்களில் 2 மட்டுமே இந்தியாவில் உள்ளன. எனவே, கையாளும் திறன், கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள அடுத்த கட்டத்துக்கு நாம் முன்னேற வேண்டும். மீன்பிடி படகுகள் இயந்திரமயமாக்கலும் குறைவாகவே உள்ளது.

இந்த சூழலில், துறைமுக மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம், துறைமுகங்கள் நவீனமயமாக்கல், துறைமுக இணைப்பு, கடற்கரை சமூக மேம்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான சமுத்திரயான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆழ்கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள வளங்கள், உயிரி பன்முகத்தன்மை குறித்த மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

கடல் வெப்பநிலை உயர்வு இன்னொரு ஆபத்தான சவால். இது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதால், காலநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் கடல்சார் பிரிவு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்சார் பொருளாதாரம் பயனளித்தாலும், பசுமை பூமி என்பது முக்கியம். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆதரவுடன், சூழலியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் பேசும்போது, “கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. கடல்வழி சரக்கு போக்குவரத்து செயல்பாடுகளில் 1700 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்.

சாகர்மாலா திட்டத்தில் ரூ.5.60 லட்சம் கோடி திட்டங்களில் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிலான 228 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் கடந்த ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்திய சரக்கு போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி 420 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது” என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, “அடுத்த 24 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல்சார் பொருளாதாரம் மிக முக்கிய பங்காற்றுகிறது. பெரிதாக கனவு காணுங்கள் அதற்காக கடுமையாக பாடுபடுங்கள்” என்றார். “இதுவே நேரம், சரியான நேரம், பாரதத்தின் பொன்னான நேரம்” என்று தமிழில் பேசினார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பாத நாயக், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக வேந்தர் வி.சங்கர், துணைவேந்தர் மாலினி வி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் 245 பேர் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள 4 கல்வி நிறுவனங்களின் 1,944 மாணவர்களும் பட்டம் பெறுகின்றனர். ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான சமுத்திரயான் திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆழ்கடல் வளங்கள் ஆராயப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x