Published : 28 Oct 2023 07:59 AM
Last Updated : 28 Oct 2023 07:59 AM
ஈரோடு: சென்னிமலை குறித்த சர்ச்சைபேச்சு விவகாரத்தை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தவறாகக் கையாண்டதால் தமிழகஅரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது அரசு கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு பகுதியில் கடந்த மாதம் 17-ம் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. அவற்றில் சென்னிமலை கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.இந்த விவகாரத்தில் மதபோதகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கியதுண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக இந்து முன்னணி அமைப்பினர் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை, இந்து முன்னணி, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: ஜெபக்கூட மோதல் சம்பவம் தொடர்பாக கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்து, உள்ளூரைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ததே பிரச்சினைக்கு முதல் காரணம்.
கிறிஸ்தவ முன்னணி நடத்தியஆர்ப்பாட்டத்தில், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இது திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஒதுங்கிக்கொண்ட நிலையில், இந்துமுன்னணி மற்றும் பாஜகவினர் ‘சென்னிமலையைக் காப்போம்’ என்ற முழக்கத்தோடு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டது அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் தமிழ்க் கடவுளான முருகனின் பக்தர்களாக பங்கேற்றனர். இதனால், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக பாஜகவிற்கு லாபமோ, திமுகவுக்கு பின்னடைவோ உடனடியாக ஏற்படவில்லை.
அதேநேரத்தில், அரசு நிர்வாகம்,காவல் துறையின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஜெபக் கூட்டங்களை நடத்துவதுடன், மத மாற்றத்துக்கான பணிகள் தொடர்வதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இவை சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் அளவுக்கு சென்ற நிலையில்கூட, மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய கவனம் செலுத்தவில்லை. அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி, நல்லிணக்க கூட்டம்கூட இதுவரை நடத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் உளவுத் துறையின் செயல்பாடு போதுமானதாக இல்லை.
கிறிஸ்தவ அமைப்புகள் காவல்நிலையத்தில் அளித்த கடிதத்தில், "நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இருவர், சென்னிமலை குறித்து பேசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் பேச்சுக்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர். இந்தக் கடிதத்தை மக்களிடமும், முருக பக்தர்களிடமும் கொண்டு சேர்த்திருந்தால், கோபம் தணிந்திருக்கக் கூடும்.
கண்காணிப்பு அவசியம்: இனியாவது, ஈரோடு மாவட்டத்தில் ஜெபக்கூடங்கள் அமைத்தல், மதமாற்றப் பிரச்சாரம் செய்தல் போன்றவற்றைக் கண்காணித்து, உரிய விதிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ வேண்டும்.
சென்னிமலை விவகாரத்தில் வெளியூர்களில் வசிப்போர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளில் உடன்பாடு இல்லை என இப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தெரிவித்தாலும், அதன் எதிரொலி தங்கள் மீது இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். மக்களின் கோபத்தைத் தூண்டும் வகையிலோ, அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலோ சிறு சம்பவம் நடந்தால்கூட, அதுபெரிய அளவில் சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT