Published : 28 Oct 2023 08:15 AM
Last Updated : 28 Oct 2023 08:15 AM

பசும்பொன்னில் 3 நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி இன்று தொடக்கம்: நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் வருகை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று (அக். 28) தொடங்கி, வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள்அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்றுதேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் காலை 7.35 மணிக்கு கணபதி ஹோமம், லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

நாளை (அக். 29) லட்சார்ச்சனை பெருவிழா தொடர்ச்சி மற்றும்அரசியல் விழா கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

2024-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் குருபூஜையில் பங்கேற்று, மரியாதை செலுத்துவர் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரகடிஐஜி துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், கமுதி முதல் பசும்பொன் வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பசும்பொன்னில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x