Published : 28 Oct 2023 06:00 AM
Last Updated : 28 Oct 2023 06:00 AM

சென்னையில் மொத்தம் 38.68 லட்சம் வாக்காளர்கள்: வரைவு பட்டியலில் 48 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கம்

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.படம்: மபிரபு

சென்னை: சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 38 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 48 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சிரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா பங்கேற்று வரைவுவாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

கடந்த ஜன.5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 512, பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 71 ஆயிரத்து 653,இதர வாக்காளர்கள் 1,112 எனமொத்த 38 லட்சத்து 82 ஆயிரத்து277 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அதன் பிறகு நடைபெற்ற தொடர்திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 935 ஆண், 17 ஆயிரத்து 911 பெண், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 34 ஆயிரத்து 866 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 536 ஆண்,24 ஆயிரத்து 415 பெண், 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 48 ஆயிரத்து 963 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அதன்படி தற்போது 19 லட்சத்து 9 ஆயிரத்து 911 ஆண், 19 லட்சத்து 65 ஆயிரத்து 149 பெண் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் இடம்பெற்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அதிக பட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 460 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில்1 லட்சத்து 70 ஆயிரத்து 254 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 719 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர்தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர்தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைந்துள்ளன.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் வரும் நவ. 4, 5 மற்றும் 18,19 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x