Published : 27 Oct 2023 03:32 PM
Last Updated : 27 Oct 2023 03:32 PM
புதுச்சேரி: தேசய அளவில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பதிவேற்றம் செய்வதில் புதுச்சேரி குறைவான அளவில் இருக்கிறது என்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி வல்லவன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இப்பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றள்ளனர். பின்னர், மாவட்ட தேர்தல் அதிகாரி வல்லவன் கூறியது: "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2024-ஐ தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 27-ம் தேதி (இன்று) முதல் வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இக்காலக் கட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் முன்னோட்டமாக கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம். மேலும், வரும் நவம்பர் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பணியிலிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதுடன், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்த படிவங்களை பெற்றுக் கொள்வார்கள்.
தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாவட்டத்தில் (மாஹே மற்றும் ஏனாம் உட்பட) ஆண்கள் வாக்காளர்கள் 3,97,429 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 4,45,759 பேரும், மூன்றாம் பாலினத்தவர் - 122 பேரும் என மொத்தம் 8,43,310 வாக்காளர்கள் உள்ளனர். தேசிய அளவில் புதுச்சேரி ஆன்லைன் மூலமாக வாக்காளர் பதிவேற்றம் செய்வது குறைவான அளவில் இருக்கிறது. எனவே, ஆன்லைன் வசதியை அதிகமாக பயன்படுத்த வாக்காளர்கள் முன்வர வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களை வீடுகளுக்கெ சென்று அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து, அவர்களும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் 100 சதவீதம் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியல் சேர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக அனைத்து கல்லூரிகளிலும் கேம்பஸ் அம்பாசிஸ்டரை நியமித்துள்ளோம். கடந்த முறையைவிட இந்த முறை வாக்காளர் பட்டியலில் 3,187 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். அதேபோல், ஆண்கள் - 3,444, பெண்கள் - 3,044 என 6,488 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, வாக்காளர்கள் தமது வாக்குச் சாவடிக்கு சென்று பெயர் மற்றும் இதர விவரங்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம்" என்று வல்லவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT