Published : 27 Oct 2023 02:46 PM
Last Updated : 27 Oct 2023 02:46 PM

பால் விநியோக நேரத்தை நீட்டிக்க வேண்டும்: ஆவின் மாதாந்திர அட்டைதாரர்கள் கோரிக்கை

சென்னை: ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் விநியோகிக்கப்படும் நேரத்தை காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று 'இந்து தமிழ் திசை' நாளிதழின் உங்கள் குரல் சேவையில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆவின் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பால், ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

இதுதவிர, மாதாந்திர பால் அட்டைகள் மூலமாக நுகர்வோருக்கு சில்லறை விற்பனை விலையை விட சலுகை விலையில் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பால் அட்டைகளால் பயன்பெற்று வருகின்றனர். மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தை காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழின் உங்கள் குரல் வாசகர் சேவையை தொடர்பு கொண்ட சென்னை சைதாப்பேட்டை காந்தி மண்டபத்தை சேர்ந்த அலமேலு கூறியதாவது: சென்னை சைதாப்பேட்டை காந்தி மண்டபத்தில் ஒரு பால் பூத் உள்ளது. இங்கு அட்டைதாரர்களுக்கு காலை 6.30 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்கிறார்கள்.

அதன்பிறகு, மாதாந்திர அட்டைதாரர்கள் பால் வாங்க வந்தால், ஆவின் பால் பாக்கெட்டுகள் இருந்தாலும் பால் விநியோகம் செய்வது கிடையாது. பால் பாக்கெட் கேட்டால், அவர்களை ஏளனமாக பேசி அவமானப்படுத்துகின்றனர்.

அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பால் பாக்கெட்டுகளை சில்லறை விலையில் விற்று வருகின்றனர். எனவே, மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு பால் விநியோகம் செய்யும் நேரத்தை காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ”அட்டைதாரர்களுக்கு ஆவின் பால் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை விநியோகம் செய்யப்படும். அதன்பிறகு, மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் வழங்க இயலாது. ஏனெனில், பால் வழங்குபவர்கள் தனியார் முகவர்கள். அவர்களுக்கு இது பகுதி நேர வேலையாகும். இதன்பிறகு, மற்ற வேலைக்கு அவர்கள் சென்றுவிடுவார்கள்.

மேலும், பால் பாக்கெட் அடுக்கி கொண்டு வரும் பெட்டிகளை மீண்டும் திருப்பி பால் பண்ணைக்கு அனுப்ப வேண்டும். அங்கு அதை தொகுத்து, சுத்தம் செய்து தயாராக வைக்கவேண்டும். இந்த பெட்டிகள் வருவதில் தாமதம் ஏற்பட்டால், சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் அட்டைதாரர்களுக்கு காலை 6 மணி வரையும் அதிகபட்சமாக காலை 6.30 மணி வரையும் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x