Published : 27 Oct 2023 10:09 AM
Last Updated : 27 Oct 2023 10:09 AM
சென்னை: ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது, நேற்று முன்தினம் அக்டோபர் 25 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில், முதன்மை நுழைவாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, பெட்ரோல் குண்டு வீசிய நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும். இந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது . அதில், "பல மாதங்களாக, கவர்னரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலும், தி.மு.க., தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வாய்மொழி வாயிலாக, பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளம் வாயிலாக, கவர்னர் பற்றி அவதூறாக மிரட்டல் விடும் வகையில் பேசி வருகின்றனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, கவர்னரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பு விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுவதும், இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், ராஜ்பவனில் போட்டி அரசு நடத்துவதைப் போல இயங்குவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் செய்கின்றன.
அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கிற வரம்புக்குள் நின்று ஆளுநர் செயல்பட்டால் விமர்சனங்கள் எழாது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கருத்துரிமை இருக்கிறது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்ட முன் வரைவுகளுக்கு அனுமதி தராமல், தானடித்த மூப்பாக ஆளுநர் செயல்படுவது கண்டனத்துக்குரியது தான்.
ஆனால் இதையெல்லாம் திசை திருப்புகிற வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மீது ஆளுநர் பழி போட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும்
தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT