Published : 27 Oct 2023 05:57 AM
Last Updated : 27 Oct 2023 05:57 AM
சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதி பெற்று வருபவர்களும்,பலத்த சோதனைக்குப் பிறகே ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா' வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது, பெட்ரோல்குண்டு வீசிய ரவுடி கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.
மேலும், 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் ஆணையர் விளக்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தென் சென்னை இணைஆணையர் சி.பி.சக்ரவர்த்தியும் ஆளுநரைநேரில் சந்தித்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து நேரில் விளக்கம் அளித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு: இதற்கிடையில், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு30 போலீஸார் வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஒரு உதவி ஆணையர், 3 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 45 போலீஸார் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே ஆளுநர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம்இருக்கும். தற்போது குடியரசுத் தலைவர்சென்னை வர உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.
மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: இதற்கிடையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாகவும், தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் மத்திய உள்துறைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கைஅனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாதந்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சட்டம்-ஒழுங்கு அறிக்கையை தலைமைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலரிடம் இருந்து பெற்று, மத்திய உள்துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்புவது வழக்கம்.
சில நேரங்களில் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபியை நேரில் அழைத்து விளக்கம் கோரி, அதனடிப்படையில் அறிக்கை அளிப்பார்.
இந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னைக்கு வந்து ஆளுநர் மாளிகையில் தங்கும் நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில், மத்திய உளவுப் பிரிவு (ஐபி) அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம், மாநில அரசின் நடவடிக்கை, முதல் தகவல் அறிக்கை பதிவு மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மத்திய உள்துறை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT