Published : 27 Oct 2023 04:32 AM
Last Updated : 27 Oct 2023 04:32 AM
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களிடம் திமுக எம்எல்ஏ கையெழுத்து பெற்ற விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. கட்சி நிகழ்வை வகுப்பறைக்கு கொண்டு சென்றது தவறு என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் கடந்த அக்.21-ம்தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினும், தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். அதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா, தனது தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்து விளக்கம் அளித்து கையெழுத்து பெறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு பள்ளிகளில் அரசியல் செய்வது தவறு என ஒரு தரப்பினரும், மாணவர்களிடம் நீட் பாதிப்புகளை கொண்டு செல்ல வேண்டுமென மற்றொரு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். திமுக எம்எல்ஏவின் செயலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, “எம்எல்ஏ பிரபாகர் ராஜா பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வின் பாதகங்களை எடுத்துரைத்து அவர்களிடம் கையெழுத்து பெறுகிறார். இதில் தவறான உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. நீட் தேர்வு எனும் பெரும் சந்தைக்கு ஆதரவான முகம் கொண்டவர்களே இதை சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தை பெரிதாக்குபவர்கள் சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்த ‘டம்மி ஸ்கூல்’ கருத்து தொடர்பாக ஏன் அமைதி காக்கின்றனர். அவர் செய்த நோக்கம் சரியானது என்றபோதும் செயல்படுத்திய வழிமுறை ஏற்புடையதல்ல. மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோருக்கும் உரிய விளக்கம் அளித்து கையெழுத்து பெற்றிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறும்போது, “எம்எல்ஏவின் செயல்பாடு தவறானதாகும். நீட் தேர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கு முழுமையான புரிதல் இருக்காது. அவர்களிடம் வகுப்பறைக்கே நேரடியாக சென்று கையெழுத்து பெறுவது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மேற்கொண்டிருப்பது அரசியல் சார்ந்த செயல்பாடாகும். இதை கல்விசார்ந்த இடங்களில் புகுத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் கல்லூரி வகுப்புகள் முடிந்த பின்பு பேருந்து நிலையம், பூங்காங்கள் போன்ற வெளியிடங்களில் மாணவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். ஆட்சியில் இருப்பதால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
பதவி விலக தயார்: இதுதொடர்பாக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவிடம் கேட்டபோது, “விளையாட்டுத்துறை சார்பாக எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றேன். அப்போது ஒரு பிளஸ் 2 மாணவர் என்னிடம் வந்து திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போதைய சூழலில் ஒட்டுமொத்த பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் நீட் தேர்வின் பாதிப்புகளை கூறினால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன். அதன்பின் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் முழுமையாக கருத்துகளை பகிர்ந்துகொண்டு, விருப்பமுள்ளவர்கள் கையெத்திடலாம் என்று தெரிவித்தேன். எவரையும் கட்டாயப்படுத்தவில்லை.
இந்த காணொலியை முழுமையாக காணாதவர்கள் அதை தவறான நோக்கத்தில் சித்தரிக்க முயல்கின்றனர். நான் கையெழுத்து பெறுவதற்காக பள்ளிக்கு திட்டமிட்டு செல்லவில்லை. அப்படி நினைத்திருந்தால் எனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரே நாளில் பல்வேறு பள்ளிகளில் கையெழுத்துகளை பெற்றிருக்க முடியும். அதேநேரம் வகுப்பறைக்கு சென்று நான் கையெழுத்து பெற்றிருக்கக்கூடாது. அதை தவறு என கூறினால் ஏற்கிறேன். மேலும், நான் மாணவர்களை நிர்பந்தம் செய்து கையெழுத்து பெறவில்லை. கட்டாயப்படுத்தியதை உறுதிபடுத்தினால் நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT