Published : 27 Oct 2023 04:23 AM
Last Updated : 27 Oct 2023 04:23 AM
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் இன்றே தொடங்குகின்றன.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்று தொடங்குகிறது.
இதற்கிடையே, 17 வயது முடிந்ததுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது ஆனதும் தானாக பெயர் சேர்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ஜனவரியில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக, தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்விஎஸ்பி இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் நவ.4, 5, 18, 19-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்றும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணி டிச.9-ம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜன.5-ம் தேதி வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT