Published : 27 Oct 2023 04:08 AM
Last Updated : 27 Oct 2023 04:08 AM

மதுரை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பொங்கி வழியும் கழிவுநீர் - சரிசெய்ய முடியாமல் அதிகாரிகள் திணறல்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் தொட்டியில் இருந்து பொங்கி ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர். (வலது) பழங்காநத்தம் 71-வது வார்டு பொட்டு ஊருணி தெரு மற்றும் தண்டல்காரன்பட்டி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்.

மதுரை: மதுரை மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு திரும்பிய பக்கமெல்லாம் கழிவு நீர் பொங்கி சாலைகள், தெருக்களில் ஆறு போல் ஓடுகிறது.

பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புக்கான வரை படம் இல்லாததால் சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறு கின்றனர். மதுரை நகரில் 1924-ம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களால் பாதாள சாக்கடை அமைப்பு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதற்குப் பின் 1959 மற்றும் 1983-ம் ஆண்டில் பாதாள சாக்கடை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது மாநகராட்சி பழைய 72 வார்டுகளில் பாதாளசாக்கடை கழிவுநீர் கட்டமைப்பு 797 கி.மீ. நீளத்துக்கு உள்ளது. இந்த கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு சென்று சுத்திகரிக்கப் படுகிறது. 2013-ம் ஆண்டு இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் நமக்கு நாமே திட்டத்தில் குடியிருப்பு வாசிகளால் போடப்பட்ட பாதாள சாக்கடை அமைப்புகள்

இருந்தாலும் அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டவை. அதனால், தற்போது ரூ.550 கோடிக்கு புதிதாக 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் அடுத்த 50 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அதனால், இந்த 28 வார்டுகள் கழிவு நீர் பிரச்சினையின் தீர்வை எட்டும் நிலையில் உள்ளன.

ஆனால், பழைய 72 வார்டுகள் உள்ள நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகளில் அடைப்பு, உடைப்புகளால் திரும்பிய பக்கமெல்லாம் கழிவு நீர் பொங்கி தெருக்கள், சாலைகளில் ஆறு போல் ஓடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக் குள்ளாகின்றனர். மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது டெங்கு பரவும் நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “பழைய 72 வார்டுகளில் போடப்பட்ட பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புக்கான வரைபடம் இல்லை. அதனால், சுகாதாரத் துறை, பொறியியல் துறை அதிகாரிகளால் பாதாள சாக்கடை கட்டமைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வுகாண முடியவில்லை.

கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்களைக் கொண்டு பொங்கும் பாதாளசாக்கடை தொட்டிகள் வழியாக கழிவுநீரை உறிஞ்சி எடுத்துச் செல்கின்றனர். மழைநீர் வாய்க்கால்கள் இல்லாததால் மழைக் காலத்தில் மழைநீரும் பாதாள சாக்கடை அமைப்புகளில் புகுந்து விடுகிறது. அதனால், மழைக் காலங்களில் மக்கள் சாலைகளில், தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு கழிவுநீர் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கி நிற்கிறது.

போதிய கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்களும் மாநகராட்சியில் இல்லை. அதனால், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளால் பாதாள சாக்கடை கழிவு நீர் பொங்கும் இடங்களில் அதை உறிஞ்சி எடுத்துச் செல்ல முடியவில்லை. மேலும், 72 வார்டுகளில் போடப்பட்ட பாதாள சாக்கடை கட்டமைப்பு, அக்காலத்துக்கு தேவையான கட்டமைப்பில் போடப்பட்டவை.

தற்போது மாநகராட்சியில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாதாள சாக்கடை கட்டமைப்பு போதுமானதாக இல்லை. தற்போதுள்ள கட்டமைப்பின் மூலம் மொத்தம் 61 எம்எல்டி கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. இவ்வளவு கழிவுநீரை எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு பழைய வார்டுகளில் பாதாளசாக்கடை குழாய்கள், கட்டமைப்புகள் பலமாக இல்லை.

4 மடங்கு பெரிதாக இருக்க வேண்டிய இடங்களில் ஒரு மடங்கு சிறிய குழாய்களை போட்டுள்ளனர். கழிவு நீர் தடையின்றிச் செல்ல முடியாமல் மண் சேர்ந்து அடிக்கடி அடைத்து விடுகிறது. கடந்த காலங்களில் பாதாள சாக்கடை தொட்டிகளில் உடனுக்குடன் தூய்மைப் பணியாளர்கள் இறங்கி அடைப்புகளைச் சரி செய்தனர்.

அதனால், பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புகளில் நீடித்த பிரச்சினை வெளியே தெரியவில்லை. ஆனால், தற்போது பாதாள சாக்கடை தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி பணிபுரியக் கூடாது. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வந்தாலும், பாதாள சாக்கடை கட்டமைப்பு தொட்டிகள், குழாய்கள் சிறியதாக உள்ளதால் அதைச் சரி செய்ய முடியவில்லை.

வெளி நாடுகளில் 4 முதல் 5 ஆட்கள் பாதாள சாக்கடை தொட்டிகளில் இறங்கி வேலை பார்க்கலாம். ஆனால், நமது பாதாள சாக்கடை தொட்டிகளில் ஒரு ஆள்கூட உள்ளே இறங்க முடியாது. மோசமான பாதாள சாக்கடை கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு தற்போதுள்ள நவீன வாகனங்களைக் கொண்டு பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x