Published : 26 Oct 2023 06:33 PM
Last Updated : 26 Oct 2023 06:33 PM

ஆளுநர் மாளிகை சம்பவம் | கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: எஃப்ஐஆர் விவரம்

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம் | உள்படம்: கருக்கா வினோத்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செயய்ப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியத் தகவல்கள்:

அக்.25-ம் தேதி, மதியம் 2.40 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள பிரதான நுழைவு வாயில் எண்.1-க்கு நேர் எதிர்புறம் உள்ள நடைபாதையில் இருந்து, ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலை நோக்கி இரண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசினார். முதலாவது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் சாியாக ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் எண்.1-ன் முன்வந்து, இரும்புத் தடுப்பு அருகே பலத்த சத்தத்துடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் இடத்துக்கு அருகே வந்து விழுந்தது. கருக்கா வினோத்தை பிடிப்பதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் அவருக்கு நேர் எதிர்புறம் ஓடியபோது, அவர் மற்றும் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து மீண்டும் காவலர்களை நோக்கி வீசினார்.

அந்த பாட்டிலும், முதலாவதாக வீசப்பட்ட பாட்டில் விழுந்த இடத்துக்கு அருகாமையில் பூந்தோட்டம் அமைந்த்துள்ள தடுப்புச் சுவர் மீது விழுந்தது. அப்போது கருக்கா வினோத்தனை காவலர்கள் சேர்ந்து பிடிக்க முற்பட்டபோது, "என்னை பிடிக்க வந்தீங்கனா உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்" என்று மிரட்டினார். இருப்பினும், அவரை மடக்கிப் பிடித்து ஜே-3 கிண்டி காவல் நிலையத்துக்கு பிடித்து சென்று ஒப்படைத்ததாக, அந்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொலை செய்யப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, “நாங்கள் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பல்ல” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், "இது ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்திருக்கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இதில் நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. எங்காவது மனநோயாளி ஒருவர் இதுபோல வீசி சென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரத்தில், "தமிழக காவல் துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x