Last Updated : 26 Oct, 2023 07:05 PM

8  

Published : 26 Oct 2023 07:05 PM
Last Updated : 26 Oct 2023 07:05 PM

மின்வாரிய கடிதத்தில் ‘ற’-க்கு பதில் ‘ர’: அலுவலக கடிதங்கள் பிழையின்றி இருக்க நீதிபதி அறிவுரை

மதுரை: அலுவலக கடிதங்கள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் அன்வர் அலி. இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மின் இணைப்புக்கான மின் மீட்டர் பழுதாக உள்ளது. இதனால் மின் கணக்கீட்டில் தவறு ஏற்படுகிறது. இதனால் பழுதான மின் மீட்டரை மாற்றவும், தவறான மின் கணக்கீட்டை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "மண்டபம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மனுதாரருக்கு நிலுவை மின் கட்டணம் தொடர்பாக 24.3.2013-ல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘முதுநிலை மதிப்பீட்டு அலுவலரின் கள ஆய்வின் போது 20.11.2018 முதல் 23.3.2018 வரையிலான கன்ஸம்சன் யூனிட் இம்போர்ட்க்கு பதிலாகவும், எக்ஸ்போர்ட் யூனிட்டுக்கு பதிலாக இம்போர்ட் யூனிட் தவறுதலாக உள்ளது என கண்டரியப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கடைசி வார்த்தையாக ‘கண்டறியப்பட்டுள்ளது’ என்பதற்கு பதிலாக ‘கண்டரியப்பட்டுள்ளது’ என உள்ளது. இதனால் அந்தக் கடிதத்தை அனுப்பிய பெண் அதிகாரியை அழைத்து விசாரித்தபோது அதிர்ச்சி மேலும் அதிகமானது. அந்த அதிகாரியால் கடிதத்தில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டிய போதும் அவர் அதை ஏற்கவில்லை. அந்த பெண் அதிகாரியின் தமிழாசிரியர் அவருக்கு ‘ர’ மற்றும் ‘ற’ எழுத்துகளின் வித்தியாசத்தை கற்பிக்கவில்லை. எனது சொந்த மாவட்டம் தஞ்சாவூர். எனது தொடக்ககல்வி ஆசிரியர் ‘ர’ என்பது சின்ன ‘ர’, ‘ற’ என்பது பெரிய ‘ற’ என எனக்கு கற்பித்துள்ளார். நெல்லை பகுதியில் இதனை குச்சி ‘ர’, குண்டு ‘ற’ என்பார்கள்.

அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும். மொழியின் தரம் குறைந்தது குறித்து அனைவரும் கவலைப்படுகிறோம். ஆங்கில கலப்பு இல்லாமல் சுத்தமான தமிழில் பேச முடியாது. அதே நேரத்தில் எழுதும் போது சுத்தமாகவும், பிழையின்றியும் எழுத வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு என் மனைவி வீட்டு பணியாளரை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பினார். அந்த பணியாளர் பொருட்களை வாங்கி வந்து கணக்குச் சீட்டை வழங்கினார். அந்த சீட்டில் ‘பாக்கி’ தொகை என்பதற்கு பதிலாக ‘பக்கி’ தொகை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் நான் விசாரித்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கடிதம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த மாணவர் கைப்பட எழுதிய கடிதத்தில் ‘வாக்குவாதம்’ என எழுதுவதற்கு பதில் தான் ‘வேக்குவாதம்’ எனக் குறிப்பிடும் வகையில் வேக்குவாதத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவருக்கு கருணை காட்டவில்லை. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உயர் நீதிமன்றத்தின் சான்றழிக்கப்பட்ட உத்தரவுகளில் கூட எழுத்துப் பிழைகள், இலக்கண பிழைகள் உள்ளன. அழியா கவிஞர் பாரதியார் 'ஆங்கிலத்தை சிதைப்பதையும், தாய்மொழியை கொலை செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு மீது உதவி செயற்பொறியாளர் 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x