Published : 26 Oct 2023 03:55 PM
Last Updated : 26 Oct 2023 03:55 PM
சென்னை: ‘ஆளுநர் மாளிகையில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது’ என்று தமிழக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொலை செய்யப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் (எண் 1) முன்பு எப்போதுமே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கும். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 3 மணியளவில் கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.
இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...