Last Updated : 26 Oct, 2023 02:57 PM

2  

Published : 26 Oct 2023 02:57 PM
Last Updated : 26 Oct 2023 02:57 PM

அடுக்ககம், கடைகளுக்கு தமிழ் பெயர் சூட்டியவர்களுக்கு பரிசு அறிவித்தும் தகுதியானோரை தேடும் தமிழ் வளர்ச்சித் துறை

கள்ளக்குறிச்சி: தமிழ் மொழியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தை மாதம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த விழாவில் தமிழறிஞர்களை சிறப்பித்தும் வருகிறது. இதுதவிர ‘திருவள்ளுவர் விருது’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடத்தி, பரிசுகளை வழங்கி வருகிறது.

அதேபோல் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம், ஆட்சிமொழி கருத்தரங்குகள், ஆட்சி மொழி பயிலரங்குகள், ஆட்சிமொழி சட்ட வாரம், ஆட்சிமொழி திட்டப்பயிற்சி, சிறந்த வரைவுகள் குறிப்புகளுக்கு பரிசுகள், அரசு அலுவலகங்களுக்கு கேடயம், மென் தமிழ்ச் சொல்லாளர், ஆட்சி சொல்லகராதி, சிறப்பு சொல் துணையகராதி, உலகத் தாய் மொழி நாள், தமிழ்க் கவிஞர் நாள், சிலைகளுக்கு மாலை அணிவித்தல், சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு, தமிழ் நூல்கள் வெளியிட நிதியுதவி, குறள் பரிசு, மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை, நூல்கள் நாட்டுடைமை, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, என தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது, வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுதமிழில் அச்சிட்டு வழங்குதல், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி ஊக்குவிக்கப்பட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி பற்றுச்சீட்டுகள், விலைப்புள்ளிகள், ரப்பர் முத்திரைகள் ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு பயன்படுத்தியும், நிறுவன பெயர்ப் பலகைகளை தமிழில் அமைத்துள்ள 50-க்கும் குறையாத வணிக நிறுவனங்களிடம் இருந்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூலமாக விண்ணப்பங்கள் பெற்று அவற்றுள் 3 வணிக நிறுவனங்கள் (நகராட்சி-1, பேரூராட்சி-1, ஊராட்சி-1) தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

தகுதியுடைய வணிக நிறுவனத்தினர் இதற்கான படிவத்தை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், தமிழில் பெயர் சூட்டியுள்ள குடியிருப்பு அடுக்ககங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையால் பரிசுகள் வழங்கப்படும். இதற்கான படிவம் மற்றும் விதிமுறைகளை தொடர்புடைய அலுவலகங்களில் (நகராட்சி அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம்) பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் அந்ததந்த மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், அந்த மாவட்டத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி, அதே பெயரில் பதிவு செய்தும், பற்றுச்சீட்டு நடைமுறையில் செயல்படுத்துபவர்கள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி அதை முறையாக தமிழ் பதிவு செய்திருப்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தமிழில் பெயர் சூட்டியிருப்பவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று, துறை தலைமைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், “அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்க இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் நடைமுறையில் நிலை வேறாக உள்ளது. தமிழில் பெயர் வைத்திருந்தால், பதிவு ஆங்கிலத்தில் இருக்கிறது. இரண்டும் தமிழில் செய்திருந்தால், பற்றுச் சீட்டு ஆங்கிலத்தில் இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை தேடித்தேடி அலைந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. 99.5 சதவீதம் பேர் கலப்பின மொழியில் தான் வாழ்கின்றனர்” என்றனர். ஆனாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் கூறுகையில், “முன்பு வணிக நிறுவனங்கள் தமிழில் தான் பதிவு செய்ய வேண்டும் என அரசாணை இருந்தது. காலப்போக்கில் ஆங்கில மோகத்தால் அவை நீர்த்துப் போனது. ஒவ்வொரு வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்ற மனோபாவம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். அரசு தற்போது பரிசு கொடுத்து ஊக்குவிப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் வணிக நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளின் பதிவு தமிழில் இருக்க வேண்டும் என வரைமுறைப்படுத்தி, நிர்ப்பந்தம் செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x