Published : 26 Oct 2023 02:54 PM
Last Updated : 26 Oct 2023 02:54 PM
சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024, ஜன.1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 27.10.2023 அன்று வெளியிட உள்ளது. அக்.27 முதல் டிச.9ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவ.4 (சனிக்கிழமை), நவ.5 (ஞாயிற்றுக்கிழமை), நவ.18 (சனிக்கிழமை) மற்றும் நவ.19 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கட்சி செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் (BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட, மாநகர கட்சி செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கட்சி அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணி குறித்து கட்சி நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment