Published : 26 Oct 2023 11:11 AM
Last Updated : 26 Oct 2023 11:11 AM

கோயில் நிதியில் கலாசார மையம்; தமிழக அரசு சட்ட விரோதமாக செயல்படலாமா?- நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

சென்னை: கோயில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்? அதை பக்தர்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமாகாது என்று தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "'கோயில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்? அதை பக்தர்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமாகாது. எனவே, சட்டத்துக்கு உட்பட்டு அறங்காவலர் குழு ஒப்புதலோடு, அந்த நிதியை கலாசார மையத்துக்கு பயன்படுத்த இருக்கின்றனர்' என்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில், 29 கோடி ரூபாய் செலவில் கலாசார மையம் அமைக்கப்போவதாக கூறப்படும் விவகாரத்தில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோயில்களின் நிதியை அந்தந்த கோயில்களின் மேம்பாட்டுக்காக தான் செலவிட வேண்டும் என்பது விதி. கோவில்களின் மேம்பாட்டுக்காகதான் பக்தர்கள் நிதி அளிக்கின்றனர் என்பதுதான் உண்மை. விதியை மீறி செயல்பட யாருக்கும் உரிமையில்லை. சட்ட விரோதமாக செயல்பட அரசுக்கு உரிமையில்லை. தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் அரசே ஈடுபடுவது பொறுப்பற்ற செயல்.

அறங்காவலர் குழு அமைப்பதிலேயே முறைகேடுகள் இருக்கின்றன என்பதே தலையாய குற்றச்சாட்டு. அறங்காவலர்கள் கோயில் நிர்வாகத்தை முறையாக செலுத்தவும், கோயில் நிதியை கோயில் மேம்பாட்டிற்காக மட்டுமே செலவிடவும் தான் அதிகாரம் உள்ளது.

மற்றபடி கோவில் நிதியின் சொந்தக்காரர் அந்த கோயிலில் உள்ள கடவுளே என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது என்பதை சேகர் பாபு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலாசார மையம் அமைக்க வேண்டுமென விரும்பினால் தமிழக அரசின் நிதியிலிருந்து அமைக்கட்டும்.

இந்து அறநிலையத்துறை கோயிலை நிர்வாகங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதை கண்காணிக்க கூடிய ஒரு சாதாரண அமைப்பு மட்டுமே என்பதை சேகர்பாபு உணரவேண்டும். தொடர்ந்து கோயில் நிதியை முறைகேடாக, தவறாக, சட்டத்துக்குப் புறம்பாக, தேவையில்லாது செலவு செய்வதை தவிர்ப்பது அரசுக்கு நல்லது, இல்லையெனில் நீதிமன்றத்தில் அவமதிப்புக்கும், கண்டனத்துக்கும் ஆளாகி வருந்த வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

சட்டத்தை பின்பற்ற வேண்டிய, அமல்படுத்த வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்பட முயற்சிப்பது ஜனநாயக விரோதம். உடன் இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x