Published : 26 Oct 2023 05:42 AM
Last Updated : 26 Oct 2023 05:42 AM

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பி ஓட முயன்ற ரவுடியை விரட்டிப் பிடித்த போலீஸார்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரபல ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரும்அவ்வப்போது நிறுத்தப்பட்டிருப்பார்கள். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி பெற்றவர்கள் கூட பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் (எண் 1) முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.

இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும்2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டநேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டு ஓரமாக விழுந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து, எதற்காக பெட்ரோல் குண்டு வீசினாய் என்று போலீஸார் கேட்டதற்கு, ‘ஆளுநர் என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுவீசினேன்’ என்று மதுபோதையில் உளறியதாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது.

14 வழக்குகள் உள்ளன: இவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக (சி - பிரிவு) உள்ளார். இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு மாம்பலத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையிலும், 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். மேலும், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப். 10-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தார். குற்ற வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான் அவர் தற்போது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பெட்ரோல் குண்டு சிதறல்களை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x