Published : 26 Oct 2023 05:25 AM
Last Updated : 26 Oct 2023 05:25 AM
சென்னை: ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகம் உள்ளது. இங்கு டிஜிபி சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நேற்று ஆலோசித்தார்.
இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், காவல் ஆணையர்கள் சந்தீப் ராய் ரத்தோர் (சென்னை), அமல்ராஜ் (தாம்பரம்), சங்கர் (ஆவடி), உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தசரா விழா, குரு பூஜை போன்ற நிகழ்வுகள் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்ததற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார். மேலும், செர்பியா நாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது அவர், கஞ்சா போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது போன்ற அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். முதல்வரின் இந்த உத்தரவுகளை கண்டிப்புடன் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், “கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வாராந்திர சிறப்புச் சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் பணம் பறிக்கும் ரவுடி கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT