Published : 01 Jan 2018 09:30 AM
Last Updated : 01 Jan 2018 09:30 AM
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு நேர்காணல்..
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை முதல்முறையாக மனம்திறந்து அறிவித்துள்ளார். இதுபற்றி..
ஒரு நீண்ட கேள்விக்கு விடை தந்திருக்கிறார் ரஜினி. அரசியலுக்கு வருவது உறுதி என்பதுதான் அவரது இன்றைய வாக்குமூலம். இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உள்ள ஓர் உரிமையைத்தான் அவர் இன்று பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவரை வாழ்த்தவோ, வசைபாடவோ இந்த ஓர் அறிவிப்பு மட்டுமே போதுமானது அல்ல. எதிரி யார்? தற்போதைய கட்சிகள் அறிவிக்க இயலாத கொள்கைகள், திட்டங்கள், அதை நிறைவேற்ற சிந்தனையாளர்கள், செயல் வீரர்களைக் கொண்ட ஒரு போர்ப்படை. இந்த மூன்றும் தெளிவாக, திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட பிறகுதான் வாழ்த்துகளுக்கோ, வசைகளுக்கோ பொருள் உண்டு. நண்பர் என்ற முறையில் அவரது இந்த முடிவை வரவேற்கிறேன்.
‘சும்மா அதிருதுல்ல’ என்பது ரஜினியின் பிரபல வசனம். அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு, தமிழக அரசியல் தளத்தில் அதிர்வை ஏற்படுத்துமா?
ரஜினியை நேசிக்கிற ரசிகர் பெருங்கூட்டம் நாடு முழுவதும் உண்டு. ரசிகர்கள், வாக்காளர்கள் என்ற நிலையைத் தாண்டி, பொதுமக்களில் எத்தனை சதவீதம் பேர் அவரது வாக்காளர்கள் என்பதைப் பொறுத்தே, அரசியல் தளத்தில் அவரது அதிர்வுகள் தீர்மானிக்கப்படும்.
‘உன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ரஜினிக்கு பாடல் எழுதியவர் நீங்கள். தங்கக் காசு கொடுத்தவர்களுக்கு அவர் தர்ம, நியாயப்படி நடந்துகொள்வாரா?
கதை நாயகன் பாடுவதற்கும், பொதுவெளியில் ஒருவர் அதே வரிகளை உச்சரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கலையின் குரல் நிழல் போன்றது. களத்தின் குரல் நிஜமானது. நிழல் நிஜமானால் நல்லதுதானே! இதுபோல உற்சாகப்படுத்தும் வரிகளை பல நாயகர்களுக்கு எழுதியிருக்கிறேன். எல்லா விதைகளும் முளைப்பதில்லையே.
‘ஆன்மிக அரசியல்’ என்று ரஜினி கூறுவதை, ஒரு பகுத்தறிவாளராக எப்படி கருதுகிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை, ஆன்மிகம் வேறு; மதவாதம் வேறு. மதவாதம் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அதிலும், என்னைப் போன்ற திராவிடச் சார்பு உள்ளவர்கள், அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஆன்மிகத்தில் பக்தி நிலை, ஒழுக்க நிலை சார்ந்தது என 2 வகை உண்டு. ரஜினி ஆன்மிகத்தில் பெற்ற உயர்ந்த கருத்துகளைத்தான் ஆன்மிகம் என குறிப்பிட்டிருப்பார் என்று கருதுகிறேன். இதுபற்றி விரைவில் அவரே விளக்கம் அளிக்கக்கூடும்.
திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது புதிது அல்லவே..
திரைத்துறை என்பது முதல்வர்களைத் தயாரிக்கும் பாசறை அல்ல. கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த எல்லோரும் வெற்றிக்கொடி கட்டியவர்களும் அல்ல. வெற்றி பெற்றவர்கள் பட்டியல் சிறிது. தோல்வி அடைந்தோர் பட்டியல் நீண்டது. இந்த வெற்றி, தோல்வியை வாக்காளர்தான் தீர்மானிக்கிறார்.
அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரஜினி உங்களோடு பேசினாரா?
நான் பேசினேன். கலைத்துறையில் 40 ஆண்டு காலம் வழங்கிய உழைப்பு போல இரு மடங்கு உழைப்பை அரசியலில் வழங்கவேண்டி இருக்கும். அதற்கான உடல்வளம், மன வலிமைக்கு வாழ்த்துகள் என்றேன். நெகிழ்ந்து, மகிழ்ந்து நன்றி என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT