Published : 26 Oct 2023 05:51 AM
Last Updated : 26 Oct 2023 05:51 AM
கோவை: சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, ஆளுநரை ஒருமையில் பேசிஉள்ளார். தமிழகத்தில் தலைவர்களை ஜாதிக்குள் அடைத்துவைத்து, அதன் மூலம் ஜாதிக் கலவரங்களை உருவாக்கியதற்கு முக்கியக் காரணமாக திமுக அரசு உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஜாதிக் கட்சியினரும் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தலைவர்களின் புகைப்படத்தை வைத்துள்ளனர். எனவே,சுதந்திரப் போராட்ட வீரர்கள்தொடர்பான ஆளுநரின் கருத்து,எந்த வகையிலும் தவறு கிடையாது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் திமுக அரசு சேர்த்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு, நுழைவுவாயில்களுக்கு திமுக தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்தஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், அதற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதிலேயே கவனமாக உள்ளனர். அந்தந்த ஊரில் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களை வைக்காமல் இருக்க காரணம் என்ன?
வம்புக்கு இழுக்க வேண்டாம்: டி.ஆர்.பாலு, ஆளுநரைஒருமையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, ஆளுநரை வம்புக்கு இழுக்கும் போக்கை திமுகவினர் கைவிட வேண்டும். ஆளுநர் தனது வேலையைத்தான் செய்கிறார்.
நாங்கள் கோட்சேவை தூக்கிப் பிடிக்கவில்லை. கோட்சேவை யாரும் தூக்கிப் பிடிக்கக் கூடாது. சங்கரய்யா மிக முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர ஆளுநர் மறுக்க வாய்ப்பில்லை.
தமிழர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றால், அதற்கு முதலில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT