Published : 26 Oct 2023 06:12 AM
Last Updated : 26 Oct 2023 06:12 AM

பக்தர் மேம்பாட்டுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவது குற்றமாகாது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: பக்தர்களின் மேம்பாட்டுக்காக கோயில் நிதியைப் பயன்படுத்துவது குற்றமாகாது என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் - வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரூ.53.90 லட்சத்தில் புதிய மரத்தேர், ரூ.85.40 லட்சத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ.49 லட்சத்தில் அன்னதானக் கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 6 ராஜகோபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 6 ராஜகோபுரங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது. 15 ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது. அதேபோல, ரூ.41.53 கோடியில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கவும், ரூ.7.83 கோடியில் 41 மரத் தேர்களை மராமத்து செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபயதாரர்கள் மூலம் இதுவரை ரூ.800 கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை 1,093 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதி மூலமாக ரூ.29 கோடியில் அமைக்கப்படும் புதிய கலாச்சார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டுக்காக அக்கோயில் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கோயில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. அதைக் கொண்டு பக்தர்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றம் ஆகாது.

எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாச்சார மையத்துக்கு பயன்படுத்த இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x