Published : 26 Oct 2023 04:10 AM
Last Updated : 26 Oct 2023 04:10 AM

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ‘கேன்டீன்’ வசதி இல்லை

மதுரை: தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மதுரை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் ஒரு `கேன்டீன்' கூட இல்லாதால் பணியாளர்கள், அதிகாரிகள் டீ குடிக்க, உணவு சாப்பிட வெளியே செல்கின்றனர். இதனால் பணிகள் பாதிக்கின்றன.

மதுரை மாநகராட்சி மைய அலுவலகம் தல்லாகுளத்தில் உள்ளது. இங்கு மாநகராட்சியின் 100 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், 5 மண்டலங்களைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். மாநகராட்சி மைய அலுவலகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

பலர் பணிக்கு காலையில் சாப்பிடாமல் வருகின்றனர். அவசர வேலைகளுக்குச் செல்லும் போது மதிய உணவும் சில நேரங்களில் எடுத்து வருவதில்லை. ஆனால், மைய அலுவலகத்தில் ஒரு டீ கடை, `கேன்டீன்' கூட இல்லை. இதனால் பணியாளர்கள், பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் அவசரத்துக்கு ஒரு டீ, காபி குடிக்க முடியவில்லை.

அதிகாரிகள், பணியாளர்கள் டீ குடிக்க, உணவு சாப்பிட அலுவல கத்தை விட்டு வெளியே உள்ள கடைகளுக்குச் செல்கின்றனர். மதுரை ஆட்சியர் அலு வலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற பிற அரசு அலுவலகங்களில் டீ கடை கள், `கேன்டீன்' போன்றவை செயல்படுகின்றன. அவை அங்கு வரக்கூடிய மக்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால் தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் மாநகராட்சி அலுவலகத்தில் டீ கடை, `கேன்டீன்' வசதி இல்லாததால், ஒட்டுமொத்தமாக டீ குடிக்க பணியாளர்கள் வெளியே செல்கின்றனர். அப்போது அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. அங்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. `கேன்டீன்' வசதி இல்லாதது பணியாளர்களுக்கு மட்டு மின்றி பொது மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி வரை மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் வாகனக் காப்பகம் அருகில் டீ கடையுடன் கூடிய `கேன்டீன்' செயல்பட்டது. மாநகராட்சிக்கு வரக்கூடிய மக்கள், பணியாளர்கள் இந்தக் கடைகளில் டீ, உணவு சாப்பிட்டனர். ஆனால் கடை உரிமையாளர் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன், அந்த கடையை அகற்றினார். அதன் பின் அந்த இடத்தில் புதிதாக `கேன்டீன்' நடத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. பல அலுவலகங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் `கேன்டீன்'களை சிறப்பாக நடத்துகின்றனர். அது போன்று மகளிர் குழுக்களுக்கு அனுமதி வழங்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x