Published : 26 Oct 2023 12:33 AM
Last Updated : 26 Oct 2023 12:33 AM
சென்னை: சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணியரிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆளுநரின் துணை செயலாளர் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள். புதன்கிழமை (அக்.25) அன்று மதியம் 2.45 மணி அளவில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விழிப்புடன் செயல்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த தாக்குதலை மேற்கொண்டவர் காவலர்கள் வசம் சிக்கினார்.
கடந்த சில மாதங்களாக ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. பெரும்பாலும் இதில் ஈடுபட்டது திராவிட முன்னேற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான். வாய்மொழி தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022-ல் தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. இப்படியாக ஆளுநர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆளுநரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தொடர்பான புகார்கள் மீது காவல் துறை அலட்சியம் காட்டியது. அது ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை குலைத்தது. அதன் விளைவுதான் தற்போது ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்டுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல். வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் ஆளுநர் பணியாற்ற முடியாது. அதனால் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT