Last Updated : 25 Oct, 2023 11:47 PM

 

Published : 25 Oct 2023 11:47 PM
Last Updated : 25 Oct 2023 11:47 PM

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆஜராகாத ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ டிஐஜி-க்கு கோவை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை (அக்.25) உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில், 'இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும்' என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்), குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து, கடந்த 2022 ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பளித்தது.

ஐ.ஜி., மீது தனி வழக்குப்பதிவு: இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக, ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, 2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், ஐ.ஜி., பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு புதன்கிழமை (அக்.25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர்.

பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர மோகன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஏற்கெனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிரமோத்குமார் ஆஜராகாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தற்போது கரூரில் உள்ள செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை கைது செய்து, அக்.26-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜி-க்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x