Published : 25 Oct 2023 07:42 PM
Last Updated : 25 Oct 2023 07:42 PM
மதுரை: மதுரை - சென்னை இடையே அதிவிரைவு பகல் நேர வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1977-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் இயக்கப்படுகிறது. சுமார் 46 ஆண்டுக்கு மேலாக மதுரை - சென்னையை இணைக்கும் இந்த ரயில் தென் மாவட்ட மக்களின் உணர்வில் கலந்துள்ளது. ஒவ்வொரு நாளும் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் பிற்பகல் 1.30 மணிக்கு கிளம்பி இரவு 9.15 மணிக்கு மதுரைக்கு வந்துசேரும்.
மதுரை ரயில் நிலையத்தில் இந்த ரயில் வழக்கமாக 2 அல்லது 3-வது பிளாட்ஃபாரத்தில் இருந்து மட்டுமே காலையில் புறப்படும் நிலையில், தவிர்க்க முடியாத சூழலால் மட்டுமே வேறு பிளாட் பாரத்துக்கு மாற வாய்ப்பு உண்டு. குறிப்பாக சென்னைக்கு பகல் நேரத்தில் செல்லும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகளை சென்னைக்கு தனியாக அனுப்ப இந்த ரயில் பெரும்பாலும் தேர்வு செய்வர். தற்போது, வந்தே பாரத் ரயிலால் 7.10 மணிக்கு புறப்பட்ட வைகை ரயில் முன்கூட்டியே 6.40 க்கு புறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் வைகை ரயில் புறப்படும் பிளாட்பாரம் சில நாட்களாகவே அடிக்கடி மாற்றுவதால் அந்த ரயிலை பயணிகள் தவறவிடும் சூழல் ஏற்படுகிறது. நேற்று கூட 3-ஆவது பிளாட்பாரத்துக்குச் சென்ற பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தபோது, திடீரென 7-ஆவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படுகிறது என கடைசி நேரத்தில் தெரிந்து, அவசரத்தில் உடைமைகளுடன் ஓடினர். சிலர் ரயிலை பிடிக்க முடியாமல் தவறவிட்டுள்ளனர். மேலும், அந்த ரயிலுக்கான பேண்டரிக்கு (கேட்டரிங்) தேவையான உணவு பொருட்களை ஏற்ற முடியாமல் பயணிகளுக்கு காலை உணவுக்கு அவதிப்பட்ட சூழலும் நிகழ்ந்தது என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டி கூறுகையில், “சென்னையில் பணிபுரியும் எனது மகள், பேரனை வைகை ரயிலில் ஏற்றிவிடுவதற்கு வந்தேன். கடைசி நேரத்தில் பிளாட்பாரம் மாறியது தெரிந்து அவசரமாக ஓடி, வைகை ரயிலை பிடித்தோம். சிலர் பேக் உள்ளிட்ட உடைமைகள் ரயிலுக்குள் வீசும் சூழல் நேர்ந்தது. வைகை புறப்படும் நேரம் 6:40-க்கு மாற்றியதே பலருக்கும் தெரியாத நிலையில், மேற்கு நுழைவாயில் பகுதியில் இருக்கும் 7-ஆவது பிளாட் பாரத்திற்கு மாறியதால் தினமும் சிலர் ரயிலை தவறவிட்டனர்.
வைகை முன்கூட்டியே கிளம்புவதால் ரயிலில் காலை உணவு சாப்பிடலாம் என சிலர் சாப்பிடுவதில்லை. நேற்று முன்தினம் ரயிலில் டீ கூட பயணிகளுக்கு கிடைக்கவில்லை என எனது மகள் போனில் தெரிவித்தார். ‘வந்தே பாரத்’ ரயிலால் வைகை ‘சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ சாதாரண ரயிலாக மாறுமோ என்ற அச்சம் உள்ளது” என்றார்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “குறிப்பிட்ட பிளாட்பாரத்தில் இருந்து குறிப்பிட்ட ரயில்கள் இயக்கும் சூழலால் வைகை ரயில் 7ஆவது பிளாட்பாரத்துக்கு மாற்றியிருக்கலாம். நிர்வாக காரணமாக சில நாளாகவே புதன், சனி,ஞாயிறு கிழமைகளில் 4 மற்றும் 5 பிளாட்பாரத்தில் இருந்தும், பின் நாட்களில் 7வது பிளாட்பாரத்தில் இருந்தும் வைகை இயக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு முன்பே பிளாட்பாரம் இறுதி செய்யப்படும் சூழலில் முறையான அறிவிப்பு செய்யப்படுகிறது. பயணிகளும் முன்கூட்டியே வர முயற்சிக்க வேண்டும். 7 வது பிளாட் பாரத்தில் பயணிக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT