Published : 25 Oct 2023 07:01 PM
Last Updated : 25 Oct 2023 07:01 PM
சென்னை: "ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இன்று நண்பகல் 3 மணிக்கு, சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிஸர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.
அந்த நபரை போலீஸார் பிடித்தபோது, ஒரு பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பாட்டில் அப்படியே உடைந்து கிடக்கிறது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர். இந்தச் சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும்போது, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பிருந்த பேரிகார்டு முன்பாக விழுந்தது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அந்த நபர், 42 வயதுடைய கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே மாதிரி, ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மீது, இதேபோன்ற பாட்டிலை வீசியுள்ளார். அதற்கு முன்னதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதே மாதிரியான சம்பவம் செய்துள்ளார்.
அண்மையில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இன்று காலை 10-11 மணிக்கு மது அருந்தியுள்ளார். சம்பவத்தின்போது அவர் நிதானத்தில் இல்லை. எனவே, அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடித்து, அவரிடமிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தோம். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்குப் பின்னர், முழு விவரம் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
காவல் துறை விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று (25.10.2023), மதியம் சுமார் 03.00 மணியளவில், சர்தார் படேல் சாலை வழியாக அடையாளம் தெரியாத ஒரு நபர் நடந்து வந்தார். இவர் நான்கு பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை கொண்டுவந்ததாகத் தெரிய வருகிறது. பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை அவர் ஆளுநர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது, பணியிலிருந்த பாதுகாப்பு போலீசாரால் அவர் தடுக்கப்பட்டார். அப்போது அவர் எறிய முற்பட்ட இரண்டு பாட்டில்களானது வெளிப்புற சாலையில் (சர்தார் படேல் சாலை) விழுந்தன. பின்னர், அவர் பாதுகாப்பு போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையைச் சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேற்படி செயலில் ஈடுபட்ட நபர் நந்தனம் SM நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் எனவும், இவர் மீது E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ‘C’ வகை சரித்திரப் போக்கிரிப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதும், முன்பு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 10.02.2022 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும், மேற்சொன்ன அனைத்து வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இவர் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
மேற்படி செயல் தொடர்பாக, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி இடத்தில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், மேற்படி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசியது தடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.@pibchennai
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 25, 2023
ஆளுநர் மாளிகை விளக்கம்: இதனிடையே, “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT