Published : 25 Oct 2023 04:32 PM
Last Updated : 25 Oct 2023 04:32 PM
புதுச்சேரி: அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அரிய பொருட்களை பார்வையிடும் வகையில், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் அருகில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரமாண்ட அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும், அது திறக்கப்படாததால் திட்டத்தின் நோக்கம் சிதைந்து வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு சார்ந்த இடம் அரிக்கமேடு ஆகும். சோழர் காலத்தில் இது ஒரு மீனவ கிராமமாக இருந்து. கடல் சார் வாணிபம் நடந்து வந்தது. இது, புதுச்சேரி நகருக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையோரத்தில் அமைந்துள்ளது. அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி, பண்டைய காலத்தில் அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருக்கிறது. இங்கு கி.மு.200 முதல் கி.பி.200 வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன.
ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், சுடுமண் சிற்ப பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் அரிக்கமேட்டில் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது. அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியான ஒரு துறைமுகமாக இந்த அரிக்கமேடு அந்த காலத்தில் விளங்கியிருப்பது தான்.
இத்தனை சிறப்புமிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற இங்கு அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு விட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு காணப்படுகிறது.
அரியாங்குப்பம் ஆற்றின் கரையையொட்டி அமைந் துள்ள அரிக்கமேடு தற்போது புதர் மண்டிக் கிடக்கும் தோப்பு போல காட்சியளிக்கிறது. மரங்கள், செடி, கொடிகள் மட்டுமே உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டிடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, அரிக்கமேட்டில் மீண்டும் மறு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு அகழ்வாய்வு நடத்திய போது கிடைத்த பொருட்கள், தற்போது அங்குள்ள சிறு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரிக்கமேட்டில் கிடைத்த அரிய பொருட்கள், அங்கு துறைமுகம் மற்றும் வியாபாரம் நடைபெற்ற இடங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் புதுச்சேரியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் அருகில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரமாண்ட அருங்காட்சியகம் கட்டப்பட்டது.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறப்பு விழா காண்பதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து சில அனுமதி பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதை தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த கட்டிடத்தை சுற்றி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இங்கிருந்து வெளியேறும் பாம்புகள் சில நேரம் அருகில் உள்ள கைவினை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ரூ. 10 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டிடத்தின் நுழைவாயில் மூடப்பட்டு இருந்தாலும், சுற்றுச்சுவர் மீது ஏறி, உள்ளே புகுந்து, அங்கு அமர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.
வரலாற்று முக்கியத்துவமான ஒரு பகுதியின் வரலாற்றை மக்கள் அறியும் வகையில் கட்டப்பட்ட ஒரு அருங்காட்சியக கட்டிடம் எந்த பயன்பாடும் இல்லாமல் கிடக்கிறது. தேவையான அனுமதியைப் பெற்று, விரைவில் அருங்காட்சியகத்தை திறக்க வேண்டும். இதுபோன்ற அருங்காட்சியங்கள் மூலமே, நாம் வாழும் பகுதியின் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிய முடியும்” என்று தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT