Published : 25 Oct 2023 03:02 PM
Last Updated : 25 Oct 2023 03:02 PM
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜையை முன்னிட்டு 30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், குருபூஜையின்போது தேவர் சிலைக்கு இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் இந்த தங்கக் கவசம், அதிமுக சார்பில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி கிளையில் பாதுகாக்கப்படும். கடந்த ஆண்டு அதிமுகவில் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து ஒப்படைக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஆண்டு விழாவின்போது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையிலான அணியே அதிமுக என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு தேவர் குருபூஜை அக்டோபர் 27 முதல் 30ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.
தேவர் சிலையில் அணிவிப்பதற்காக வங்கியில் உள்ள தங்கக் கவசம் அதிமுக பொருளாளராக தற்போது உள்ள திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலையிட வாய்ப்பு இருப்பதால் அதிமுக சார்பில் அந்தக் கவத்தை பெறுவதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை கடந்த 10-ம் தேதி தங்க கவத்தை வங்கி நிர்வாகம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலயம் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் அண்ணா நகர் வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் பூஜைக்கு விழாவுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜய பாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விவிஆர்.ராஜ்சத்யன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், எம்.எஸ்.பாண்டியன், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT