Published : 25 Oct 2023 01:06 PM
Last Updated : 25 Oct 2023 01:06 PM
தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24 ஆம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.
தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சதய விழாவான இன்று (25ம் தேதி) ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, ஓதுவார்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களை பாடி ஊர்வலமாக, யானை மீது எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் பெரிய கோயில் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில்,சதய விழா குழு தலைவர் செல்வம், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்கள பொருட்களைக் கொண்டு பேரபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT