Published : 25 Oct 2023 12:57 PM
Last Updated : 25 Oct 2023 12:57 PM

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணாமலை | கோப்புப்படம்

கோவை: "தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்பி டி.ஆர்.பாலு அதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள். பல காலமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் எழுப்பி வரும் கேள்விகள். தான் தமிழகத்தின் ஆளுநராக வந்தபிறகு, தமிழகத்தில் இருந்து சுதந்திரத்துக்குப் போராடிய வீரர்களின் பட்டியலைக் கேட்டதாகவும், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர்தான் இருந்ததாகவும் கூறியிருந்தார். ஆளுநர் தேடிக் கண்டுபிடித்த பட்டியலில் 6 ஆயிரம் பேர் இருப்பதாக கூறியிருந்தார். அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருவதாகவும், பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், டி.ஆர்.பாலு ஆளுநருக்கு அளித்திருக்கும் பதிலில், ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ஏக வசனத்தில், ஆளுநரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டு அந்த அறிக்கையை டி.ஆர்.பாலு தயாரித்திருக்கிறார். அதோடு மட்டுமல்ல, ஆளுநர் மேலும் இரண்டு முக்கியமான விசயங்களையும் முன்வைத்து பேசியுள்ளார். தமிழகத்தில் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள், சாதி முத்திரையில் அடைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைவராக உருவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது உண்மைதான். 1967-ல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, முக்கியமான தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துள்ளனர்.

இன்றளவும், தென் தமிழகத்தில் குருபூஜைக்கு சென்றால், 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் சாதியாக மாற்றி, சாதி கலவரம் வருமளவுக்கு திமுக அரசு அவ்வாறு மாற்றி வைத்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு குரு பூஜைக்கும் செல்வது ஒரு போர்க்களத்துக்கு செல்வது போன்று உள்ளது. நான் கடந்த 3 ஆண்டுகளாக, தென் தமிழகத்தில் நிறைய குருபூஜை விழாக்களுக்கு செல்கிறேன். ஒவ்வொரு முறையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து தொடங்கி, குருபூஜை விழா நடைபெறும் இடம் வரை 25 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இப்படி தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, சாதி கலவரம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தியது திமுக. ஆளுநர் இப்படி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் எப்படி அதிகமாகின்றன? சாதிக் கட்சிகள் எப்படி அதிகமாக இருக்கின்றன? அனைத்து சாதிக் கட்சிகளுமே சுதந்திரத்துக்குப் போராடிய தலைவர்களின் புகைப்படங்களைத்தான் வைத்துள்ளனர். எனவே, ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார். கோபிசெட்டிப் பாளையத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது லட்சுமண ஐயர் குறித்து பேசிவிட்டு வந்தேன். அவர்தான் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முதல் சத்யாகிரகி. மிக முக்கியமான தலைவர். அந்தமேடையில் நானே ஒரு 20 பேரின் பெயரை கோபிசெட்டி பாளையத்தில் இருந்து மட்டும் படித்தேன். எனவே, தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x