Published : 25 Oct 2023 12:22 PM
Last Updated : 25 Oct 2023 12:22 PM

''சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்'' - அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்

அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல தொடர்ந்து வார்த்தை மோதல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களை தமிழக அரசு மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதன்கிழமை (இன்று) செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களை திமுக நினைவுகூற தவறியதாக, தமிழகத்தின் சுதந்திர போராட்ட வரலாறு அனைத்தும் தெரிந்தவர்போல, ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருக்கிறார். அதற்கான பதிலை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்றே தெரிவித்துள்ளார்.

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் அக்கறை உள்ளவர் போல பேசுகிற தமிழக ஆளுநர், ஊடகங்கள் வழியாக நான் அளிக்கும் பேட்டியை நிச்சயமாக கேட்பார் என்று கருதுகிறேன். ஆளுநருக்கு உண்மையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்ற பேரவைக்குழு இரண்டும் சேர்ந்து, ஆட்சிக்குழுவின் மூலமாக 18.8. 2023 அன்றும், ஆட்சிமன்ற பேரவைக்குழுவில் 20.9.2023 லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு ஒரு பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டது.

அது அந்த பல்கலைக்கழகத்தின் சட்ட விதியின்படி, ஆட்சிமன்ற பேரவைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரய்யா மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரர். கல்லூரி படிப்பையே இழந்து 9 ஆண்டுகள் சிறையில் வாடி இருக்கிறார். அதோடு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போராடியவர். அவருடைய வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டாவது ஆளுநர், இதில் கையெழுத்திட வேண்டும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x