Published : 25 Oct 2023 12:06 PM
Last Updated : 25 Oct 2023 12:06 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன் கண்டனம்

முத்தரசன் | கோப்புப்படம்

சென்னை: "நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்களாட்சியின் மாண்பையும், மரபையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருகிறார். வழிவழியாக பின்பற்றி வரும் மரபுக்கு மாறாக விளக்கம் பெறுதல் என்ற பெயரில் மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். அரசு தரப்பில் போதுமான விளக்கம் அளித்த பிறகும் எல்லையற்ற கால தாமதம் செய்து வருகிறார்.

“நீட்” தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்குக் கோரும் மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதன் விளைவாக வளரும் இளைய தலைமுறையினர் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்படுகிறார்கள். பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மூலம் தமிழக மக்கள் ஏற்க மறுத்து, எதிர்த்து போராடி வரும் தேசிய கல்விக் கொள்கையை பகுதி, பகுதியாக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நூற்றாண்டு கண்டு வாழ்ந்து வரும் தியாக சீலர், தகைசால் தமிழர் என் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவை ஏற்க மறுத்து வருகிறார். அறிவுத்துறை உலகம் ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த பேரறிவாளர் என்று அறிவித்த காரல் மார்க்ஸ் சிந்தனைகளை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும், வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார். மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து வாய் திறக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி நிலையை பாதுகாத்து வரும் தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோத, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x