Published : 25 Oct 2023 06:18 AM
Last Updated : 25 Oct 2023 06:18 AM

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20% சதவீத போனஸ் வழங்க வேண்டும்: துறையின் செயலருக்கு 9 சங்கங்கள் கடிதம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் சார்பில் போக்குவரத்துத் துறை செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2007-ம் ஆண்டு டிச.12-ம் தேதி போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை ரூ.3,500 என உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்தது. ஆனால் அதற்கு முன்பு அக்டோபர் மாதமே கணக்கீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்திதிமுக அரசு கூடுதல் போனஸ் வழங்கியது என்பதை கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை ரூ.7 ஆயிரம் அல்லது அந்த மாநிலத்தில் அட்டவணை தொழிலில் உள்ளகுறைந்தபட்ச ஊதியம் இதில் எது அதிகமோ, அதை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டுமென சட்டத் திருத்தம் செய்தது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொழில் மட்டுமே அட்டவணை தொழிலில் உள்ளது. மற்ற துறை ஊழியர்களோடு ஒப்பிட்டு போனஸ் கணக்கிடுவது தவறு எனவும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.

மேலும், 2004-ம் ஆண்டு முதல்தொடர்ச்சியாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கரோனா பேரிடர் சூழல் காரணமாக 2020, 2021-ம்ஆண்டுகளில் 10 சதவீதமாக போனஸ் தொகை குறைக்கப்பட்டது. இதை அரசு மற்றும் நிர்வாக நலன் கருதி தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதே தொகையை 2022-ம் ஆண்டும் வழங்கியதால், தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, மேற்கூறிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டுக்கான போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் கணக்கிடும்போது குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையிலான சம்பளத்தை கணக்கீட்டுக்கான தொகையாக கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x