Published : 19 Jul 2014 11:19 AM
Last Updated : 19 Jul 2014 11:19 AM
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் முனைவர் ஆர்.சேகர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இணைப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் நான் மட்டுமே பங்கேற்றேன். இப்பணி நியமனத்தில் ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் உறுதியளித்தது. இருப்பினும், அருந்ததியர் வகுப்பினருக்கான இடத்தில் வேறு வகுப்பைச் சேர்ந்தவர் ஜூலை 7-ல் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை ரத்து செய்து, என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜி. கலைவாணன் தாக்கல் செய்த மனுவில்,
ஆங்கில உதவிப் பேராசிரியர் பணி நேர்காணலில் பங்கேற்றேன். நான் மட்டுமே அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன். அருந்ததியர் உள்ஒதுக்கீடு அடிப்படையில் எனக்கு பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு இடத்தில் பிற வகுப்பைச் சேர்ந்தவருக்கு பணி வழங்கப்பட்டது. அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி கே.கே.சசிதரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ரஜினி ஆஜராகி வாதிட்டார்.
இதில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்க துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT