Published : 24 Oct 2023 06:37 PM
Last Updated : 24 Oct 2023 06:37 PM
சென்னை: "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டுமென தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய முறையில் பதில் அளித்தும் தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, தான் போகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வருவதுடன் ஒரு முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் பாரம்பரியமிக்க தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சிறுமைபடுத்தி பேசுவதுடன் அவதூறுகளையும் பொழிந்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் வரம்புகளை மீறி தொடர்ந்து நிராகரித்து வருகிறார். இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குரெலழுப்பியும் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முழுநேர அரசியல்வாதியாகவும், தமிழகத்துக்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் விரோதமாக முட்டுக்கட்டையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT