Published : 24 Oct 2023 03:37 PM
Last Updated : 24 Oct 2023 03:37 PM
சென்னை: "திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக!சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ். இது 1801-ஆம் ஆண்டு.
திமுக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் கருணாநிதி கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.திமுக அரசு அமையும் போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது.
நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மருது சகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதிருவர் சிலைகளுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT